என் மனப்பூக்களின் வாசத்தைச் சேமிக்க இந்த வலைப்பூ!!!

Thursday, September 07, 2006

இதைச் சொல்லியே ஆகவேண்டும்

மகனுக்குத் தெரிந்த பையன்; தினேஷ் குமார் என்று பேர்;
+2 மாணவன்; கணக்கு பாடத்தில் குறைந்த மதிப்பெண்
எடுத்திருக்கிறான். பெற்றோர் திட்டியதால் நான்கு நாட்களுக்கு
முன் வீட்டில் தனியாயிருக்கும் போது தற்கொலை
செய்து கொண்டான்.

இப்படி ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருந்தாலும்
அருகில் தெரிந்தவர்களுக்கு நேரும்போது பாதிப்பின்
வீச்சு நம்மை அதிகமாய்தான் தாக்குகிறது.
இதில் குற்றவாளி என்று யாரைத் தீர்ப்பிடுவது.

ஜெயந்தி எழுதிய 'பந்தயக்குதிரைகள்' கதையில் சொல்லப்படுவது மாதிரி............வாழ்க்கை என்பது பந்தயம் மட்டுமே!
அதில் ஜெயிப்பதற்கான ஓட்டம் ஒன்றே இவர்களின் முழுமுதல் சிந்தனை.............என்பதான இந்த பெற்றோர், ஆசிரியர்களின்
மனப்பாங்கு அதிர்சியாகத்தான் இருக்கிறது.

சில பள்ளிகளில் இந்த பத்தாவது, +2 பயிலும் மாணவர்களை இவர்கள் நடத்தும் விதம்..... இவர்கள் மனிதப் பிறவிகளா அல்லது
நிரலி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கணிணிகளா
என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!

பேரசைபிடித்த இவர்களின் தீவிரத்தால்தான்
உணர்வுகளும், சுதந்திரமும், இயற்கை சார்ந்த ஈடுபாடும்,
உறவுகளும் நிறைந்த மனிதகுலத்தின் அடுத்த பரிணாமம் சத்தமிலாமல் மெள்ள பிறந்து கொண்டிருக்கிறதோ என்ற உணர்வு மனதை சோகமாக்குகிறது.

மீண்டும் ஒருமுறை!

ஏற்கனவே திசைகளில் வெளிவந்ததுதான் இந்தக் கவிதை!
என்றாலும்திரும்பத் திரும்ப நினைவுகூறத்தானே
இந்த நினைவுதினங்கள்!

எல்லா ஆசிரியர்களுக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்!!!

*********************************************************
ராஜாவும் ஆசிரியரும் சிட்டுக்குருவியுமான என் அப்பா

அம்மாவின் பேறுகால விடுப்பு
ஆரம்பிக்கும் முன்பே
திடீரென வலிவந்து
நான் பிறந்துவிட
உற்றம் சுற்றம் வரும் முன்பே
தாயின் ஸ்பரிசம் படும்முன்னே
முதன் முதலாய்
என்னைக் கைகளில் வாங்கிக் கொண்டது
நீதானாம்
நான் ஆதரவாய் பற்றிக் கொண்டது
உன் விரல்களைத்தானாம்

இம்மொத்த ப்ரபஞ்சத்தில்
முகம் பார்த்த முதல் உறவு நீதானாம்
அன்பை உணர்ந்து கொண்டது
உன் முத்தத்திலென்றும்
என் முதல் உணவு
நீ பருக்கிய சர்க்கரை நீரென்றும்
உச்சி முகர்ந்து
நீ பெருமையாய் சொல்லும் போது
பூரிக்கும் என் தாய் முகம்
இப்படி தன் மகளை நேசிக்கும்
அப்பாவுக்கு
மனைவியாயிருக்கும் மகிழ்ச்சி

அம்மாவின் கருவில்
பத்துமாதந்தான்
என் மீதி குழந்தைப் பருவம்
உன் மார்பிலும் தோளிலும்தான்

நடைபயின்றது
நீ விரல் பிடித்து
நானெங்கே விழுந்திருக்கப் போகிறேன்

எனக்குத் தாலாட்டு
உன் விசில் சப்தம்
என்னைக் கொஞ்சுவதற்கென்றே
நீ உருவாக்கியத் தனிமொழிக்கு
எழுத்துக்களில்லை

பாரதியைச் சொல்லித்தருமுன்பே
காக்கைக் குருவியை
நாயை பூனையைக்
கொஞ்சக் கற்றுக்கொடுத்தாய்
'பாவம் பூனைக்குட்டி' என்றால்
நம் அகராதியில்
அது நம் நேசத்திற்குரியதென்று அர்த்தம்

'உனக்கும் உங்கப்பாவுக்கும் வேறுவேலையில்லை' என
கிண்டலடிக்கும் அம்மாவைப் பார்த்துக்
கண்சிமிட்டி நீ சொல்வாய்
'பாவம்டா அம்மா'

வாசத்தைத் தவிர
பூக்கள்
நமக்காகவில்லையென்றும்
மழையில் மட்டும்
நமக்கும் பங்குண்டென்றும்
குடைகள் வெயிலுக்கானவையென்றும்
நீதானேசொல்லித் தந்தாய்

என் காய்ச்சல் நாட்களில்
உயிரனைத்தும்
என் செவியில் உறைந்து
வீடுதிரும்பும்
உன் மிதிவண்டிச் சத்தத்திற்காய்
காத்துக்கிடக்கும்
நெற்றியில் குவியும்
உன் உள்ளங்கைக் குளுமையில் உணர்வேன்
என் காய்ச்சலின் வெம்மையை

உன் விரல் பிடித்து
நடந்து போகையில்
களிப்பாய் வணக்கம் சொல்லும்
உன் மாணவர்களையும்
புன்சிரிப்போடு உன் தலையசைப்பையும் பார்த்து
இன்னும் நெருங்கிக் கைபிடித்து நடப்பேன்

நீ கற்றுக் கொடுத்த
'பாடப்பட்டியலி'ல் இல்லாத
சரித்திரமும் புவியியலும்
'அறிவு' இயலைப் பற்றியும்
என் தகப்பன் மொழியாயிருந்தத்
தமிழைப் பற்றியும்
உன் மாணவர் புகழக் கேட்டிருக்கிறேன்

மற்ற அப்பாக்களுக்கு
வேறு வேலைகளிருந்த போது
உனக்கு மட்டும்
உன் மகளுக்கு
சைக்கிள் விடக் கற்றுக் கொடுக்கும்
முக்கியமான வேலையிருக்கும்

அம்மாவின்
வேலை பளுவைக் குறைக்க
விடுதியிலென்னைச் சேர்த்த போதுதான்
உன் பிரிவு
எனக்குக் கவிதையைக் கற்றுக்கொடுத்தது
மகளாயிருந்த நானுனக்கு
தோழியானதும் அப்போதுதான்

விடுமுறைகள்
நமக்கு
விழாக்காலங்கள்
என் விடுதி வாழ்க்கையின்
தோழமைககள்
குறும்புகள்
பிரிவுச்சுமைகள்
விளையாட்டுக்கள்
எல்லாவற்றையும் சொல்லக்கேட்டு
மீசைக்குள்ளிருந்து
சின்னசின்னதாய் வெளிவரும்
உன் அலைச்சிரிப்பைத் தான்
விடுமுறை கழிந்து
விடுதி செல்லும் போது
உடன் எடுத்துச் செல்வேன்

மொழி மறந்து
லதாவின் இசையில் கரைவாய்
வீட்டில் நானில்லாத போதும்
என் பேரைச் சொல்லித்தான்
கதவைத்தட்டுவாய்

நிறையப் படிப்பதும்
படித்ததை என்னோடு பகிர்ந்து கொள்வதும்தான்
உன்னுடைய மொத்த பொழுதுபோக்கே
கடைசிவரை

நான் கோர்த்து வைத்திருக்கும்
சொற்களைக்
கவிதைகளென்று
அம்மாவிடம் பிரகடனப் படுத்துவாய்

நான் பெண்ணென்பதை
நீ எனக்கு
ஒருபோதும் நினைவுபடுத்தியதில்லை
எந்த தெய்வங்களையும்
எனக்கு போதிக்கவுமில்லை

உதடுகளில் ஒரு சிரிப்பை
நிரந்தரமாய் தக்கவைத்துக் கொள்ளும்
மந்திரத்தை நீ எனக்குகற்றுக் கொடுத்திருக்கிறாய்

எனக்காய் நிச்சயிக்கப்பட்ட மனிதனிடம்
உன் உயிரையே அவனிடம் தருவதாய்
நீ தழுதழுத்தபோதுதான்
உன் கண்ணிலும் நீர் சுரக்குமென்று
சுற்றத்துக்குத் தெரிந்தது
எனக்கு நீ கற்றுத் தந்த தைரியம்
சற்றே ஆட்டங்கண்டது

ஒன்று தெரியும் எனக்கு
முற்பிறவியில்
நீயொரு வீரமிக்க ராஜாவாயிருந்ததும்
உன் ராஜாங்கத்தில்
நானொரு செல்ல இளவரசியாயிருந்ததும்

எனக்கு இன்னொன்றும் தெரியும்
அடுத்த பிறவியில்
நீ எனக்கு
மனிதர்களை நேசிக்கக் கற்றுத் தரும்
சிட்டுக்குருவி அப்பாவாய்
இருக்கப் போவது

Powered by Blogger