என் மனப்பூக்களின் வாசத்தைச் சேமிக்க இந்த வலைப்பூ!!!

Sunday, September 10, 2006

இதுதான் ஆண்மை!

பாரதிக்கு கம்பீரமான எம் வீர வணக்கம்

பாரதீ.....

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு'
என்றோர் முன்
பட்டங்கள் ஆளவும்
சட்டங்கள் செய்யவும் மட்டுமின்றி
எட்டுமறிவினில்
ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை
என்பதைச்
சத்தமாய் சொல்லி
எங்களை
சக்தி கொள்ளும்படி செய்ததெதற்கு...

அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு
என்பதான
இச்சக மனிதரின்
வஞ்சக மொழிகளுக்குச்
செவி புளித்து
நாணும் அச்சமும்
நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம்
வீரசுதந்திரம்
பேணு நற்குடி
பெண்ணின் குணங்களெனச்
சாடியெழுந்து சீறியது ஏன்....

'இட்ட அடி நோக
எடுத்த அடி கொப்பளிக்க'
மெட்டெழுதி மயக்கியோர் முன்
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்
நிலத்திலார்க்கும்
அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும்
கொள்ளச் சொல்லி
எதிராய் கர்ஜித்து
உரைத்தது எதனால்...

'தையல் சொல் கேளேல்' என
ஒரு பெண்ணே
கவி சொல்லிச் சென்ற போதும்
'தையலை உயர்வு செய்' என்றும்
'வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா
மானஞ்சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்'
என்றுரைத்து நீ
களித்து நின்றாடியெம்
விழிகளில் வீரத்தை விதைத்தத்தெப்படி...

ஏட்டிலும் இலக்கியத்திலும் மட்டும்
பெண்ணை தெய்வமாக்கிப்
போற்றி விட்டு
வீட்டினிலோ
சமையலறைச் சாம்பலிலே
அவளுக்குச் சமாதி கட்டிய போது
சாத்திரங்கள் பலப்பலக் கற்று
சவுரியங்கள் பலப்பல செய்து
மூத்த பொய்மைகள் யாவுமழித்து
மூடக்கட்டுகள் யாவும் தகர்த்து
ஆண்மக்கள் போற்றிட
வாழ்வமென வாழ்த்தி
ஆங்கவர் மண்பட
வீழ்த்தியதெதனால்...

கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷனென்று
தலைவரி நொந்து
விதிவழிச் சென்று பழகியவரை
வழிமறித்து அழைத்து
காதலொருவனைக் கைப்பிடித்தே
அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து
எம்மறங்கள் மாட்சி பெற
நாம் வாழ்வமெனப் பாடி
புதுவழி காட்டி
போதித்ததெதனால்...

சொல்லைய்யா பாரதி
இது ஆண்மை!
இதுதான் ஆண்மை!!
இதுதானே ஆண்மை!!!

6 Comments:

At 10:58 AM, Blogger வணக்கத்துடன் said...

கவித நல்லாருந்துச்சுங்க. நன்றி.

ஏங்க, 'ஆண்மை' ங்கற கருத்தாக்கத்த ஆதரிக்கிறீங்களா?

 
At 11:22 AM, Blogger Chandravathanaa said...

உதயா
மீண்டுமான உங்கள் வரவு மகிழ்ச்சியைத் தருகிறது.
உங்கள் அழகிய கவிதைகளைத் தொடர்ந்தும் பதியுங்கள்.

 
At 10:15 PM, Blogger உதயச்செல்வி.த said...

நன்றி சந்ரவதனா!( உங்கள் பேரை நான் உச்சரிக்க முயல்வது சரியா)
உங்கள் பெயரில், உங்கள் எழுத்தில்,
உங்கள் புலத்தில், உங்கள் நட்பில் என்றும் எனக்கு ஈடுபாடு உண்டு!
உங்கள் கவிதைகளின் புதிய பதிப்பை மீண்டும் படித்தேன். நான் இட்ட விமர்சன மறுமொழி வந்ததா தெரியவில்லை!

பெண்மையின் பலங்கள் பலங்களாக ஏற்றுக் கொள்ளப்படாத வரையில் அல்லது அவை பலவீனங்களாக சித்தரிக்கப்படும் வரையில் ஆண்மை எனப்படுவது எது என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகிறது இல்லையா தோழி!

என் வரையில் பெண்ணோ ஆணோ எப்போதும் தன்னை பெண் என்றோ ஆண் என்றோ நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை 'நான் பெண்ணாய் உணரும் தருணங்கள்' என்ற கவிதையில் முன்மொழிந்திருக்கிறேன். மீண்டும் வரும் நாட்கள் ஒன்றில் அதை பதிவில் இட உத்தேசம்.

 
At 11:01 PM, Blogger Chandravathanaa said...

நன்றி உதயா.
எனது பெயர் சந்திரவதனா.
உங்கள் பின்னூட்டங்கள் கிடைத்தன. மிகவும் நன்றி.

பெண்மையின் பலங்கள் பலங்களாக ஏற்றுக் கொள்ளப்படாத வரையில் அல்லது அவை பலவீனங்களாக சித்தரிக்கப்படும் வரையில் ஆண்மை எனப்படுவது எது என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகிறது இல்லையா தோழி!
நிட்சயமாக

'நான் பெண்ணாய் உணரும் தருணங்கள்' கவிதையையும் பதியுங்கள். உங்கள் கவிதைகளை என் ரசனைக்குட்பட்டவை.

 
At 11:23 PM, Blogger ramachandranusha said...

உதயா, நீங்களா! மீண்டும் வந்ததற்க்கு வாழ்த்துக்கள்
இப்படிக்கு,
பழைய பிரண்டு :-)

 
At 1:10 AM, Blogger உதயச்செல்வி.த said...

உஷ (நெடில் வரமாட்டேன் என்கிறது)
என்ன குறும்பு உங்களுக்கு!!
பழைய பிரண்டா!
பாக்க நாளானா பழைய பிரண்டா!
அநியாயம் usha!
நலமா!
எங்க இருக்கிறீங்க?
வாங்க வாங்க நட்பே!!

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Powered by Blogger