என் மனப்பூக்களின் வாசத்தைச் சேமிக்க இந்த வலைப்பூ!!!

Tuesday, September 19, 2006

நட்சத்திரக் காலம்

ஒரு நிலாக் கால முன்னிரவில்
களைத்த மனதை
பக்கத்தில் இருத்தி
மொட்டை மாடியில்
முதுகைக் கிடத்த...
தூரத்தில் அங்கே...
பாரதிக்குப்
பட்டுக்கருநீலப்
புடவையில் பதித்த
நல்வயிரங்களாய்த் தெரிந்த
நட்சத்திரக் குவியலில்...

பால்வாடிக் குழந்தைகளின்
பிரார்த்தனை நேர அணிவகுப்பாய்
என்ன வரிசை இது...

விழாக்கால வாணவேடிக்கை
பூமிக்குத் திரும்பி வர மறந்து
வானத்தில் தங்கிவிட்டதுபோல்
வண்ணப்பூச் சிதறல்களாய்...

வானக் கண்ணாடியில்
இரவு பூமியின்
பிரதி பிம்பமாய்...

மேகக் குழந்தையின்
உதறலில் சிதறிய
உணவுப் பருக்கைகளாய்...

நிலாப் பெண்ணின்
பூர்த்தியாகாதக்
கோலப்புள்ளிகளாய்...

கண்ணகி உடைத்த
சிலம்பில் தெறித்த
மாணிக்கப் பரல்களாய்...

நிலவு தேவதையின்
தேவ பவனிக்காய்
பாதையில் பரப்பிய
பூக்களின் தூவலாய்...

கோவில் குளத்தில்
மிதக்கும் விளக்குகளாய்...

ஹே...ஒளிப் பூக்களே
என் கண்களுக்குள் அடக்கி விட்ட
உங்களை
என் கற்பனைக்குள் அடக்க
முடியவில்லையே!

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger