என் மனப்பூக்களின் வாசத்தைச் சேமிக்க இந்த வலைப்பூ!!!

Friday, September 15, 2006

எப்போது நினைத்தாலும்

நாம் அன்றாடம் நிறைய நகைச்சுவைத் துணுக்குகளை
படித்துக்கொண்டோ, கேட்டுக் கொண்டோதான் இருக்கிறோம்.
அவைகள் நம் மனத்தின் உற்சாகத்தை புதுப்பிப்பதில் பெரும்
பங்கு வகிக்கின்றன. அதிலும் சிலர் சொல்லும் துணுக்குகள்
கால நேரம் பாராமல் நம்மை சிரிக்க வைத்துவிடும். சில அதன்
சுவையால், சில அதை சொல்பவர் விவரிக்கும் முறையால்.

என்றாலும் நம் வாழ்வில் நடந்த சில நிகழ்ச்சிகள் நாம் எப்போது நினைத்தாலும் நம்மை சிரிக்க வைப்பதோடு நம்மை, அது
நடந்த நாட்களுக்கே கூட்டிச் சென்று விடுவகிறது. அந்த சூழல்,
அப்போதிருந்த வயது, அப்போது வீசிக்கொண்டிருந்த மணம்,
நிலவிய பருவநிலை சம்பந்தப்பட்டிருந்த மனிதர்கள்
முதலியவற்றிற்குள் நம்மை அழைத்துச் சென்று விடும்.
அதனாலேயே நிஜவாழ்வில் நடந்த இம்மாதிரி
நிகழ்வுகள் எப்பொதும் நினைவு கூறத் தக்கவையாய்
பசுமையாய் இருக்கிறது போலிருக்கிறது!

இப்படித்தான் ஒருமுறை நாங்கள் சிறியவர்களாய் இருந்த
பொழுது நடந்த சம்பவம் ஒன்று:

எங்கள் சிறிய தம்பி சுந்தர் பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாய்
அப்போதுதான் பள்ளியிலிருந்து வந்திருந்த அப்பாவிடம் தான்
'ஸ்கவுட்' டில் சேர்ந்திருப்பதாகவும் அதற்கு சீருடைகள் வாங்க
வேண்டும் என்றும் கூறி உடனே வேண்டும் என்று கேட்டான்.
அப்பா " இந்த மாதம் சம்பளம் வந்தவுடன் வாங்கித் த்ருகிறேன்.
கொஞ்சம் பொறு" என்றதை கேளாமல் உடனே வேண்டும் என்று கூறிதரையில் படுத்து பொய் அழுகையை (அவன் எப்போதும்
செய்வது போல்) ஆரம்பித்து விட்டான்.

பொறுத்துப் பார்த்த அப்பா சரி இவன் அழுகையை இப்போதைக்கு எப்படியாவது நிறுத்தப் பார்ப்போம் என நினைத்து என்னைக்
கூப்பிட்டு 'பேனாவும் பேப்பரும் கொண்டுவாம்மா என்ன
என்ன வேனும்னு எழுதிக்கலாம்" என்றவுடன் அவன்
அழுகையை நிறுத்தி " ரெண்டு ஜனியன் ரெண்டு பட்டி" என்று
கூறிவிட்டு தப்பாய் சொன்னது புரிந்து போய் மடாரென்று
எழுந்து உள்ளே ஓடிவிட்டான். அப்பாவும் " ம் ஜனியன்
பட்டி அப்புறம்" என்று கூறி உரக்க சிரிக்க அப்போதுதான்
எங்களுக்கும் அவன் பனியன் ஜட்டியை ஜனியன் பட்டி
என்று சொன்னது உரைக்க விழுந்து விழுந்து எல்லோரும்
சிரிக்க அவனுக்கு ஒரே வெட்கமாக போய் விட்டது.

இந்த நிகழ்ச்சியை எப்போதும் போல ஒரு சுபயோக
சுப தினத்தில் எல்லோரும் சேர்ந்திருக்கும் போது
போட்டு உடைத்ததில் அவன் தன் மருமக்களிடம்
(எங்கள் குழந்தைகளிடம்) தன் 'ஜபர்தஸ்தை' காண்பிக்க
முனையும் போதெல்லாம் "மாமா உங்க ஜனியன்
பட்டி பத்திரம்" என்று சொல்லி விட்டால்
போதும் இவர்கள் செய்த செய்யாத குறும்புகளை
ஒவ்வொன்றாய்ச் சொல்ல அவர்கள் மறுக்க, எங்களை
சாட்சிக்க அழைக்க ஒரே களேபரம்தான் போங்கள்.

இதே போல் இன்னொரு நிகழ்ச்சி:

ஒருமுறை மருத்துவமனையிலிருந்த அப்பாவுக்கு
அம்மா சாப்பாடு சுந்தரிடம் கொடுத்தனுப்பும் போது
'அன்புள்ள அத்தானுக்கு நான் மாலையில் வரும் போது
உங்களுக்கு உடைகளும் புத்தகங்களும் கொண்டு
வருகிறேன்' என்று ஒரு துண்டு காகிதத்தில் எழுதி
அவனிடம் கொடுத்தனுப்ப அதை அவன் அம்மா
முன்னிலையிலேயே பிரித்துப் படித்துவிட்டு கொண்டுபோய்
அப்பாவிடம் கொடுத்திருக்கிறான். அப்பாவும் படித்து விட்டு
அவனிடம் 'அருமை மனைவிக்கு' என்று ஆரம்பித்து எந்த உடை,
என்னென்ன புத்தகங்கள் வேண்டுமென துண்டுக் கடிதம்
கொடுத்திருக்கிறார். அதையும் அப்பா முன்னிலையிலேயே
பிரித்துப் படித்துவிட்டு வந்து அம்மாவிடமும் தந்துவிட்டான்.

இது நடந்து சில நாட்கள் கழிந்து அப்பாவும் மருத்துவமனை
யிலிருந்து திரும்பிய பிறகு ஒருநாள் அம்மாவுக்கும்
அப்பாவுக்கும் ஏதோ கடுமையான வாக்குவாதம். இவன் இருந்திருந்தாற்போலிருந்து "அங்கென்ன அன்புள்ள
அத்தானுக்கும், அருமை மனைவிக்கும் பிரச்சனை"
என்றானே பார்க்கலாம்! அம்மாவும் அப்பாவும்
விவாதத்தை நிறுத்திவிட்டு சிரிக்கத்தொடங்கி விட்டார்கள்.
விஷயம் என்னவென்று நாங்கள் கேட்க அதை மாற்றி மாற்றி
இருவரும் சிரித்துக் கொண்டே கூற பிறகென்ன நாங்களும் கலந்து கொண்டோம் அந்த சிரிப்பில்.

Powered by Blogger