என் மனப்பூக்களின் வாசத்தைச் சேமிக்க இந்த வலைப்பூ!!!

Sunday, September 10, 2006

இதுதான் ஆண்மை!

பாரதிக்கு கம்பீரமான எம் வீர வணக்கம்

பாரதீ.....

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு'
என்றோர் முன்
பட்டங்கள் ஆளவும்
சட்டங்கள் செய்யவும் மட்டுமின்றி
எட்டுமறிவினில்
ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை
என்பதைச்
சத்தமாய் சொல்லி
எங்களை
சக்தி கொள்ளும்படி செய்ததெதற்கு...

அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு
என்பதான
இச்சக மனிதரின்
வஞ்சக மொழிகளுக்குச்
செவி புளித்து
நாணும் அச்சமும்
நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம்
வீரசுதந்திரம்
பேணு நற்குடி
பெண்ணின் குணங்களெனச்
சாடியெழுந்து சீறியது ஏன்....

'இட்ட அடி நோக
எடுத்த அடி கொப்பளிக்க'
மெட்டெழுதி மயக்கியோர் முன்
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்
நிலத்திலார்க்கும்
அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும்
கொள்ளச் சொல்லி
எதிராய் கர்ஜித்து
உரைத்தது எதனால்...

'தையல் சொல் கேளேல்' என
ஒரு பெண்ணே
கவி சொல்லிச் சென்ற போதும்
'தையலை உயர்வு செய்' என்றும்
'வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா
மானஞ்சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்'
என்றுரைத்து நீ
களித்து நின்றாடியெம்
விழிகளில் வீரத்தை விதைத்தத்தெப்படி...

ஏட்டிலும் இலக்கியத்திலும் மட்டும்
பெண்ணை தெய்வமாக்கிப்
போற்றி விட்டு
வீட்டினிலோ
சமையலறைச் சாம்பலிலே
அவளுக்குச் சமாதி கட்டிய போது
சாத்திரங்கள் பலப்பலக் கற்று
சவுரியங்கள் பலப்பல செய்து
மூத்த பொய்மைகள் யாவுமழித்து
மூடக்கட்டுகள் யாவும் தகர்த்து
ஆண்மக்கள் போற்றிட
வாழ்வமென வாழ்த்தி
ஆங்கவர் மண்பட
வீழ்த்தியதெதனால்...

கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷனென்று
தலைவரி நொந்து
விதிவழிச் சென்று பழகியவரை
வழிமறித்து அழைத்து
காதலொருவனைக் கைப்பிடித்தே
அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து
எம்மறங்கள் மாட்சி பெற
நாம் வாழ்வமெனப் பாடி
புதுவழி காட்டி
போதித்ததெதனால்...

சொல்லைய்யா பாரதி
இது ஆண்மை!
இதுதான் ஆண்மை!!
இதுதானே ஆண்மை!!!

Powered by Blogger