என் மனப்பூக்களின் வாசத்தைச் சேமிக்க இந்த வலைப்பூ!!!

Sunday, September 17, 2006

பெண்ணாய் உணரும் தருணங்கள்

சின்னஞ்சிறுவயதில்
இன்னொரு குழந்தையை
நிர்வாணமாய்ப் பார்க்க நேர்ந்து
விவரம் கேட்ட போதும்

குசுகுசுப்பாய்ப் பேசிக் கொண்டிருந்த
பள்ளித்தோழிகளுடன்
கூட்டுச் சேர்ந்த போதும்

சேர்ந்து விளையாட
தடை விதிக்கப் பட்ட போதும்
எனத் தொடர்ந்து

பருவமெய்தி
வெறுத்திருந்த போதும்
விளக்கம் தரப்பட்டு
தளர்ந்திருந்த போதும்

இன்னும்
தனிவழி போக
தயங்கிய போதும்
தைரியம் வளர்த்து
தனிநடந்த போதும்

பழக்கிய பெண்ணுடை
பற்பல சமயங்களில்
சிற்சிறு பணிகளில்
குறுக்கிட்டு தடங்கல்கள்
விளைவித்த போதும்

பெண்ணென்பதாலேயே
என் சாதாரணச் செயல்கள்
அசாதாரணமாய்
அறிவிக்கப் பட்ட போதும்

பெண்ணென்பதாலேயே
என் முயற்சி முனைப்புகள்
மறுக்கப்பட்ட போதும்

மறுப்புகள் தாண்டி
ஜெயித்தெழுந்த போதும்

காதல் கடிதங்களின்
கற்பனை வர்ணனைகள்
சலிப்பைத் தந்து
சங்கடப் படுத்திய போதும்

கனிந்த காதலில்
களித்திருக்கையிலும்
தாய்மையை என்னில்
தரித்திருக்கையிலும்

நான் பெண்ணென்றுணர்ந்தோ
உணர்த்தப்பட்டோ
வளர்ந்து வந்திருக்கிறேன்

மற்றபடி
நானொரு பெண்ணென்ற நினைவை
நெஞ்சில் இருத்தி
நித்தமும் உழன்று
தவித்ததில்லை

ஆனாலும்
தன்னுணர்வோடும்
தப்பித்தல்களோ
தயக்கமோ இன்றியும்
தாழ்வுணச்சிகள் ஏதுமின்றியும்
கெஞ்சி நிற்காமலும்
இவர்களால் வகுக்கப்பட்டிருக்கும்
வரையரைகளைத் தாண்டியும்
நான் 'பெண்' என்பதை உணர்ந்தே
வாழக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

7 Comments:

At 12:02 AM, Blogger நாமக்கல் சிபி said...

நல்ல கவிதை!

//ஆனாலும்
தன்னுணர்வோடும்
தப்பித்தல்களோ
தயக்கமோ இன்றியும்
தாழ்வுணச்சிகள் ஏதுமின்றியும்
கெஞ்சி நிற்காமலும்
இவர்களால் வகுக்கப்பட்டிருக்கும்
வரையரைகளைத் தாண்டியும்
நான் 'பெண்' என்பதை உணர்ந்தே
வாழக் கற்றுக் கொண்டிருக்கிறேன்
//

அதுதான் நல்லது!

 
At 12:41 AM, Blogger தேவமகள் said...

உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே! காலந்தாழ்ந்த நன்றி!

 
At 3:25 AM, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

இயல்பா சொல்லி இருக்கீங்க கவிதைக்காக சும்மா சம்பவங்களை உற்பத்தி செய்யாம வாழ்க்கையில் எல்லாருக்கும் நடக்கும் சம்பவங்களையே சொல்லி இருப்பது நல்லா இருந்தது.

///
காதல் கடிதங்களின்
கற்பனை வர்ணனைகள்
சலிப்பைத் தந்து
சங்கடப் படுத்திய போதும்
///

நிறைய கடிதங்கள் வந்திருக்கும் போல உங்களுக்கு :-))))

 
At 4:44 AM, Blogger தேவமகள் said...


இயல்பா சொல்லி இருக்கீங்க கவிதைக்காக சும்மா சம்பவங்களை உற்பத்தி செய்யாம வாழ்க்கையில் எல்லாருக்கும் நடக்கும் சம்பவங்களையே சொல்லி இருப்பது நல்லா இருந்தது.


உங்களின் வார்த்தைகளும் இயல்பாய் இருக்கிறது நண்பரே! பெயருக்கு பாராட்டாமல் நிஜமாய் விமர்சிக்கிறது உங்கள் வார்த்தைகள்!! நன்றி!

 
At 4:55 AM, Blogger ரவி said...

////மறுப்புகள் தாண்டி
ஜெயித்தெழுந்த போதும///

அது தான் தேவை...!!!!

 
At 3:50 AM, Blogger தேவமகள் said...

தங்கள் வருகைக்கு நன்றி! புரிதலுக்கு வாழ்த்துக்கள் ரவி!!

 
At 4:34 AM, Blogger பூங்குழலி said...

கவிதை நன்று..

 

Post a Comment

<< Home

Powered by Blogger