என் மனப்பூக்களின் வாசத்தைச் சேமிக்க இந்த வலைப்பூ!!!

Thursday, October 19, 2006

நிறம் குறைந்த நிஜங்கள்

தம்பி பாபு, தொடர்ந்தார்போல் இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் தன் குழந்தைகள் சூர்யா, நிக்கிதா மற்றும் தங்கை மகன் புஷ்கின் ஆகியோரைக் கூட்டிக் கொண்டு, சின்ன வயதில் அப்பா அழைத்துச் சென்ற, சைக்கிள் ஓட்டும், சேட்டைகள் செய்யும், வளையத்துக்குள் தாவிக் குதிக்கும், ரிங் மாஸ்டரின் தலையை தின்று விடாமல் வாயிலிருந்து விடுவிக்கும் சாகஸ விலங்குகளும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கோமாளிகளும் நிறைந்த, தான் ரசித்த ‘சர்க்கஸ் ‘ பார்க்க போகலாம் என்று முடிவு செய்து, முதலிலேயே போய் குழந்தைகள் அருகிலிருந்து பார்ப்பதற்கு வசதியாக முதல் வகுப்பு அனுமதி சீட் டும் வாங்கி வந்து விட்டான்.
அடுத்த நாள் எங்கே செல்லப்போகிறோம் என்பதைச் சொல்லாமலேயே அவர்களுக்குப் பிடித்த உடைகளை அணிவித்து, பிடித்த அலங்காரம் செய்து, வெளியே செல்வதென்றால் அவர்கள் அடிக்கும் அத்தனை லூட்டிகளுக்கும் ஈடுகட்டி ஒருவழியாக அவர்களைப் புறப்பட வைத்து அழைத்தும் வந்துவிட்டான்.
அவனுக்கு மனதுக்குள் ஒரே பரபரப்பு,அவர்களுக்காக தான் ஏற்பாடு செய்திருக்கும் இந்த இரகசிய ஏற்பாட்டை நினைத்து, அவர்கள் அங்கு மகிழ்ந்து ஆரவாரிக்க போகும் கணங்களை நினைத்து.
தங்களை அப்பா சர்கஸுக்கு கூட்டி வந்திருப்பதைப் பார்த்து அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்! கொண்டாட்டம்!! அதைப் பார்க்க அவனுக்கும்தான்!
சென்றார்கள் உள்ளே. முன்னே மறைக்கும் அளவு உயரமில்லாதவர்கள் அமர்ந்திருக்கும் இடமாக பார்த்து இடம் பிடித்து அமரவைத்து தானும் அமர்ந்து, நிகழ்ச்சி தொடங்க காத்திருந்து, அதுவரை அவர்களின் சந்தேககங்கள், கேள்விகள் அனைத்திற்கும் விளக்கமளித்து…. ஒரு வழியாக நிகழ்ச்சியும் தொடங்கியது.
இவன் இவர்களை உற்சாகப் படுத்த கைத்தட்டி ஆரவாரிக்க இவர்கள் மூவரும் ஒருமாதிரி இவனை திரும்பிப் பார்த்திருக்கிறார்கள்.
தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டோமோ என நினைத்து “அங்கே பார் யானை…. பார் புலி இப்போ வருது….. அய்யோ இந்த கோமாளியைப் பாருங்க சிரிப்பா வருதில்ல….” என்றெல்லாம் இவன் பாட்டுக்கு பேசிக்கொண்டேயிருக்க ….சூரியா “போங்கப்பா அனிமல் ப்லேனட்டுல இதைவிட சூப்பரா இதெல்லாம் வருது; இதையெல்லாம் இங்க பாத்தா பாவமாயிக்கு இல்லாப்பா?” எனவும், புஷ்கின் “மாமா அன்னக்கி நாம டீவீல பாத்த சர்கஸ் நல்லா கலர்கலரா இதவிட சூப்பரா இருந்ததில்லீங் மாமா?” எனவும் கூறிக் கொண்டிருக்க, நிக்கிதா இந்த பக்கம் திரும்பி வந்திருந்த மற்ற மக்களையும் இவளையொத்த குழந்தைகளையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாளாம்.
தம்பி பாவம் நொந்து போய்விட்டான்.
வண்ணங்கள் மிகுந்த பிம்பங்களால் வசீகரிக்கப்பட்டிருக்கும் இவர்களால் நிறம் குறைந்த நிஜங்களை எப்படி இரசிக்க முடியும்!!!!!

5 Comments:

At 11:40 AM, Blogger மதி கந்தசாமி (Mathy) said...

உதயா,

நிறங்குறைந்த நிஜங்கள் பற்றிய சிந்தனை யோசிக்கவேண்டிய ஒன்று.

ஆனால், சூர்யா

//சூரியா “போங்கப்பா அனிமல் ப்லேனட்டுல இதைவிட சூப்பரா இதெல்லாம் வருது; இதையெல்லாம் இங்க பாத்தா பாவமாயிக்கு இல்லாப்பா?” //

சர்க்கஸ் மிருகங்களைப்பார்த்து அனுதாபப்பட்டது, எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. காட்டில் வாழ வேண்டிய மிருகங்களைப் பிடித்து வந்து, ஆறறிவு மிருகங்களுக்கு வேடிக்கைகாட்டும் செய்கை வெட்கப்படவேண்டிய செய்கை இல்லையா?

சூர்யாவை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

-மதி

பி.கு.: உதயா: உங்களின் மீள் வருகை சந்தோஷமாக இருக்கிறது. இது 3-4 மீள் வருகை என்று நினைக்கிறேன். வாங்க. வாங்க. :)

 
At 9:58 PM, Blogger உதயச்செல்வி.த said...

ஆமாம் மதிம்மா!

சர்க்கஸ் மிருகங்களைப்பார்த்து அனுதாபப்பட்டது, எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. காட்டில் வாழ வேண்டிய மிருகங்களைப் பிடித்து வந்து, ஆறறிவு மிருகங்களுக்கு வேடிக்கைகாட்டும் செய்கை வெட்கப்படவேண்டிய செய்கை இல்லையா?

சூர்யாவை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.


நானும் இதை மனதார ஆமோதிக்கிறேன். கண்டிப்பாக ஊக்கப்படுத்த வேண்டும்.

பி.கு:
நீங்கள் என்னை ஊக்கப்படுத்துவதற்கு நன்றி மதி!!!

 
At 11:34 PM, Blogger செல்வநாயகி said...

இந்த வரிகள் பிடித்தன. தொடர்ந்து எழுதுங்கள்.

 
At 12:14 AM, Blogger செல்வநாயகி said...

எந்த வரிகள் என்பதை ஒட்டாமல் விட்டுவிட்டேன் உதயா:))

////வண்ணங்கள் மிகுந்த பிம்பங்களால் வசீகரிக்கப்பட்டிருக்கும் இவர்களால் நிறம் குறைந்த நிஜங்களை எப்படி இரசிக்க முடியும்!!!!!////

 
At 2:15 AM, Blogger Chandravathanaa said...

வண்ணங்கள் மிகுந்த பிம்பங்களால் வசீகரிக்கப்பட்டிருக்கும் இவர்களால் நிறம் குறைந்த நிஜங்களை எப்படி இரசிக்க முடியும்

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Powered by Blogger