என் மனப்பூக்களின் வாசத்தைச் சேமிக்க இந்த வலைப்பூ!!!

Thursday, October 26, 2006

தேவை ஒரு சேவை

என் மகன் ப்ரேம் நிமல்( வயது 16) SS MUSIC கில்
Internship training கிற்காக( multimedia)
சென்னை வருகிறான். அவனுக்கு
ராயப்பேட்டைப் பக்கம் தங்க ஏதாவது
ஒரு நல்ல தங்கும் விடுதியை யாராவது
அடையாளம் காட்ட முடியுமா வலையுறவுகளே!
நானும் முயன்று கொண்டிருக்கிறேன். நன்றி

Monday, October 23, 2006

பொய்களா இவைகள்



“சௌக்கியமா”
“நான் சௌக்கியந்தான்”
“பரீட்சை நல்லாத்தான் செஞ்சிருக்கேன்”
“நம் காதலுக்கு முன் எதுவும் பெரிதில்லை”
“மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு”
“எனக்கு ரொம்ப இளகிய மனசு”
“பணம் பெரிதில்லை”
“நான் பொய் சொல்வதில்லை”
“உன்னை எப்போதோ மறந்து விட்டேன்”
“ஓ இப்போதுதான் ஞாபகம் வருகிறது”
“சொந்தங்கள் சுகமானவை”
“வயதாவது ஒன்றும் வருந்தத் தக்கதில்லை”
“மரணத்தைக் கண்டு பயமொன்றுமில்லை”

வாழ்க்கையில் இப்படி
அவ்வப்போது என்னால் சொல்லப்பட்ட
முழுக்க நிஜமில்லாத
இது போன்ற கொஞ்சம் வார்த்தைகள்
பொய்களில் சேருமா

Thursday, October 19, 2006

நிறம் குறைந்த நிஜங்கள்

தம்பி பாபு, தொடர்ந்தார்போல் இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் தன் குழந்தைகள் சூர்யா, நிக்கிதா மற்றும் தங்கை மகன் புஷ்கின் ஆகியோரைக் கூட்டிக் கொண்டு, சின்ன வயதில் அப்பா அழைத்துச் சென்ற, சைக்கிள் ஓட்டும், சேட்டைகள் செய்யும், வளையத்துக்குள் தாவிக் குதிக்கும், ரிங் மாஸ்டரின் தலையை தின்று விடாமல் வாயிலிருந்து விடுவிக்கும் சாகஸ விலங்குகளும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கோமாளிகளும் நிறைந்த, தான் ரசித்த ‘சர்க்கஸ் ‘ பார்க்க போகலாம் என்று முடிவு செய்து, முதலிலேயே போய் குழந்தைகள் அருகிலிருந்து பார்ப்பதற்கு வசதியாக முதல் வகுப்பு அனுமதி சீட் டும் வாங்கி வந்து விட்டான்.
அடுத்த நாள் எங்கே செல்லப்போகிறோம் என்பதைச் சொல்லாமலேயே அவர்களுக்குப் பிடித்த உடைகளை அணிவித்து, பிடித்த அலங்காரம் செய்து, வெளியே செல்வதென்றால் அவர்கள் அடிக்கும் அத்தனை லூட்டிகளுக்கும் ஈடுகட்டி ஒருவழியாக அவர்களைப் புறப்பட வைத்து அழைத்தும் வந்துவிட்டான்.
அவனுக்கு மனதுக்குள் ஒரே பரபரப்பு,அவர்களுக்காக தான் ஏற்பாடு செய்திருக்கும் இந்த இரகசிய ஏற்பாட்டை நினைத்து, அவர்கள் அங்கு மகிழ்ந்து ஆரவாரிக்க போகும் கணங்களை நினைத்து.
தங்களை அப்பா சர்கஸுக்கு கூட்டி வந்திருப்பதைப் பார்த்து அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்! கொண்டாட்டம்!! அதைப் பார்க்க அவனுக்கும்தான்!
சென்றார்கள் உள்ளே. முன்னே மறைக்கும் அளவு உயரமில்லாதவர்கள் அமர்ந்திருக்கும் இடமாக பார்த்து இடம் பிடித்து அமரவைத்து தானும் அமர்ந்து, நிகழ்ச்சி தொடங்க காத்திருந்து, அதுவரை அவர்களின் சந்தேககங்கள், கேள்விகள் அனைத்திற்கும் விளக்கமளித்து…. ஒரு வழியாக நிகழ்ச்சியும் தொடங்கியது.
இவன் இவர்களை உற்சாகப் படுத்த கைத்தட்டி ஆரவாரிக்க இவர்கள் மூவரும் ஒருமாதிரி இவனை திரும்பிப் பார்த்திருக்கிறார்கள்.
தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டோமோ என நினைத்து “அங்கே பார் யானை…. பார் புலி இப்போ வருது….. அய்யோ இந்த கோமாளியைப் பாருங்க சிரிப்பா வருதில்ல….” என்றெல்லாம் இவன் பாட்டுக்கு பேசிக்கொண்டேயிருக்க ….சூரியா “போங்கப்பா அனிமல் ப்லேனட்டுல இதைவிட சூப்பரா இதெல்லாம் வருது; இதையெல்லாம் இங்க பாத்தா பாவமாயிக்கு இல்லாப்பா?” எனவும், புஷ்கின் “மாமா அன்னக்கி நாம டீவீல பாத்த சர்கஸ் நல்லா கலர்கலரா இதவிட சூப்பரா இருந்ததில்லீங் மாமா?” எனவும் கூறிக் கொண்டிருக்க, நிக்கிதா இந்த பக்கம் திரும்பி வந்திருந்த மற்ற மக்களையும் இவளையொத்த குழந்தைகளையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாளாம்.
தம்பி பாவம் நொந்து போய்விட்டான்.
வண்ணங்கள் மிகுந்த பிம்பங்களால் வசீகரிக்கப்பட்டிருக்கும் இவர்களால் நிறம் குறைந்த நிஜங்களை எப்படி இரசிக்க முடியும்!!!!!

Thursday, October 05, 2006

வாழ்க்கைத் துணை நலம்!

ஆணென்றும் பெண்ணென்றும் பகுக்க வேண்டாம்;
அவரவரின் தேவைகளைப் பிரிக்க வேண்டாம்;

ஆளுமையை எவர்மேலும் செலுத்த வேண்டாம்;
அடிமையென்று எவரையுமே தாழ்த்த வேண்டாம்;

சார்ந்திருத்தல் தவறென்று தவிக்க வேண்டாம்;
சேர்ந்திருக்கும் பொழுதுகளைத் தவிர்க்க வேண்டாம்;

சோர்வென்பதிருவருக்கும் சலிக்க வேண்டாம்;
தோள் கொடுக்கத் துணையிருக்க துவள வேண்டாம்;

தோழமையின் மகத்துவத்தை மறக்க வேண்டாம்;
தோழனும் தோழியும் நீர் தளர வேண்டாம்;

ஆழமான உறவு இது உதற வேண்டாம்;
காலம் போன பிறகு கிடந்து தவிக்க வேண்டாம்.

Friday, September 22, 2006

மறைக்கப்பட்ட உண்மைகள்

பெரியோர்கள்
மகான்களின்
பிறந்த தினங்களில்
நினைவு தினங்களில்
நம் நினைவுக்கு வருவது
அவர்களைவிட
அன்றைய விடுமுறை தினமும்
அது சார்ந்தத் திட்டமிடல்களுமே

திருமணங்களில்
மணமக்களை
வாழ்த்திச் செல்பவர்களை விடவும்
கணக்கு வைத்து
கணக்குத் தீர்த்து
வந்திருப்போரோடு உறவைப் புதுப்பித்துக்
கலைபவர்களே அதிகம்

கடவுளர்களின் எண்ணிக்கை
பெருக்கிப் போனதால்
பக்தியும் நீர்த்துப் போய்விட
பண்டிகைகள்
நமக்கோ செலவுதினம்
சார்ந்திருப்போர்கோ
வரவு தினம்

நமக்கெல்லாம்
புத்தாண்டு பிறப்பது
ஆண்டுயர்வு நாளில்

காதலராய் இருந்தபோதோ
இருவரின் பிறந்த நாட்கள்
வேரெவருடையதையும் விட
புனித நாட்கள்

பெற்றோரானதும்
கருவில் சுமந்து
காத்திருந்து பெற்ற
நம் குழந்தைகளின்
பிறந்த நாட்களை விடவும்
வேறு யார் பிறப்பில்
பொங்கும் பூரிப்பு

எம் தாய் தந்தையர்
விழிமூடித் துயின்று
குழிமூடப் பிரிந்த நாளில்
உயிர் தவிக்க
அந்த கணம் உணர்ந்த
வெறுமையும் தனிமையும்
நினைவில் உறைந்து போக
மனம் உணரும்
அவர்தம் நினைவுநாளை விட
வேறு எவருடைய நினைவுநாட்கள்
எம்மை அதிக துயரத்தில்
ஆழ்த்திவிட முடியும்

மனசாட்சிகள்
மறைத்து வைத்திருக்கும்
விழாக்களையும்
வைபவங்களையும் பற்றிய
மறைக்கப்பட்ட உண்மைகளின் பட்டியல்
இப்படித்தான் நீளுகிறது!

Tuesday, September 19, 2006

நட்சத்திரக் காலம்

ஒரு நிலாக் கால முன்னிரவில்
களைத்த மனதை
பக்கத்தில் இருத்தி
மொட்டை மாடியில்
முதுகைக் கிடத்த...
தூரத்தில் அங்கே...
பாரதிக்குப்
பட்டுக்கருநீலப்
புடவையில் பதித்த
நல்வயிரங்களாய்த் தெரிந்த
நட்சத்திரக் குவியலில்...

பால்வாடிக் குழந்தைகளின்
பிரார்த்தனை நேர அணிவகுப்பாய்
என்ன வரிசை இது...

விழாக்கால வாணவேடிக்கை
பூமிக்குத் திரும்பி வர மறந்து
வானத்தில் தங்கிவிட்டதுபோல்
வண்ணப்பூச் சிதறல்களாய்...

வானக் கண்ணாடியில்
இரவு பூமியின்
பிரதி பிம்பமாய்...

மேகக் குழந்தையின்
உதறலில் சிதறிய
உணவுப் பருக்கைகளாய்...

நிலாப் பெண்ணின்
பூர்த்தியாகாதக்
கோலப்புள்ளிகளாய்...

கண்ணகி உடைத்த
சிலம்பில் தெறித்த
மாணிக்கப் பரல்களாய்...

நிலவு தேவதையின்
தேவ பவனிக்காய்
பாதையில் பரப்பிய
பூக்களின் தூவலாய்...

கோவில் குளத்தில்
மிதக்கும் விளக்குகளாய்...

ஹே...ஒளிப் பூக்களே
என் கண்களுக்குள் அடக்கி விட்ட
உங்களை
என் கற்பனைக்குள் அடக்க
முடியவில்லையே!

Sunday, September 17, 2006

பெண்ணாய் உணரும் தருணங்கள்

சின்னஞ்சிறுவயதில்
இன்னொரு குழந்தையை
நிர்வாணமாய்ப் பார்க்க நேர்ந்து
விவரம் கேட்ட போதும்

குசுகுசுப்பாய்ப் பேசிக் கொண்டிருந்த
பள்ளித்தோழிகளுடன்
கூட்டுச் சேர்ந்த போதும்

சேர்ந்து விளையாட
தடை விதிக்கப் பட்ட போதும்
எனத் தொடர்ந்து

பருவமெய்தி
வெறுத்திருந்த போதும்
விளக்கம் தரப்பட்டு
தளர்ந்திருந்த போதும்

இன்னும்
தனிவழி போக
தயங்கிய போதும்
தைரியம் வளர்த்து
தனிநடந்த போதும்

பழக்கிய பெண்ணுடை
பற்பல சமயங்களில்
சிற்சிறு பணிகளில்
குறுக்கிட்டு தடங்கல்கள்
விளைவித்த போதும்

பெண்ணென்பதாலேயே
என் சாதாரணச் செயல்கள்
அசாதாரணமாய்
அறிவிக்கப் பட்ட போதும்

பெண்ணென்பதாலேயே
என் முயற்சி முனைப்புகள்
மறுக்கப்பட்ட போதும்

மறுப்புகள் தாண்டி
ஜெயித்தெழுந்த போதும்

காதல் கடிதங்களின்
கற்பனை வர்ணனைகள்
சலிப்பைத் தந்து
சங்கடப் படுத்திய போதும்

கனிந்த காதலில்
களித்திருக்கையிலும்
தாய்மையை என்னில்
தரித்திருக்கையிலும்

நான் பெண்ணென்றுணர்ந்தோ
உணர்த்தப்பட்டோ
வளர்ந்து வந்திருக்கிறேன்

மற்றபடி
நானொரு பெண்ணென்ற நினைவை
நெஞ்சில் இருத்தி
நித்தமும் உழன்று
தவித்ததில்லை

ஆனாலும்
தன்னுணர்வோடும்
தப்பித்தல்களோ
தயக்கமோ இன்றியும்
தாழ்வுணச்சிகள் ஏதுமின்றியும்
கெஞ்சி நிற்காமலும்
இவர்களால் வகுக்கப்பட்டிருக்கும்
வரையரைகளைத் தாண்டியும்
நான் 'பெண்' என்பதை உணர்ந்தே
வாழக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

Powered by Blogger